அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,அழகர்கோயில்


தொலைபேசி: 0452 - 2470228

திருக்கோயில் வரலாறு

அழகர் மலையின் பழமைச் சிறப்பு

அழகர் மலை” என்பது மதுரைக்கு வடக்கே 21 கி.மீ தூரத்தில் இருக்கிறது.இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது.
இதற்குத் திருமாலிருஞ் சோலை,உத்யான சைலம்,சோலைமலை, மாலிருங்குன்றம்,இருங்குன்றம்,வனகிரி,விருஷ பாத்திரி அல்லது இடபகரி, முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது .அதிலிருந்து பல சிறிய மலைகள்,நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம் மலையில் பலவகை மரங்களும்,செடிகளும்,கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால்,இதைச் சோலைமலை,திருமாலிருஞ்சோலை,வனகிரி முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.

இச் சோலைகளில் பூக்களும் காய்களும்,கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது.

இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் “அழகர்” என்று போற்றப்படுகிறார் .இவரே வடமொழியில் “சுந்தர ராஜன்” என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதாரமாகிய இராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது.அழகர் என்பதற்கு அழகுடையவர்,அழகானவர் என்று பொருள் மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத் தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்திக்கும் கூடலகர் என்னும் பெயர் ஏற்பட்டிருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத் தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு.108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை(நாகப்பட்டினம்) என்றதிருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல்(மதுரை) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கள்ளழகர் திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது .மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டிருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி,தலம், தீர்த்தம் ஆகியவை பற்றிய வராக புராணம்,பிரம்மாண்டமான புராணம்,வாமன புராணம், ஆக் நேய புராணம் முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து “விருஷ பாத்திரி மகாத்மியம்” என்ற ஸ்தல புராணத்தின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது.அந்நூலில் இத் தலத்தின் புராணப் பெருமைகளை அறிந்து கொள்ளலாம்.